தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் இணையத்தள நிர்வாகிகளைக் கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது.
சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 3 இணையத்தளங்கள் மீது கடந்த டிசம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படை வெல்லும் படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டது தொடர்பாக ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் என்கிற இரு இணையதளங்களின் நிர்வாகிகள் 5 பேரை கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது. தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் 3 நிர்வாகிகள் விழுப்புரத்தையும் டிவிடி ராக்கர்ஸ் தளத்தின் இரு நிர்வாகிகள் திருநெல்வேலியையும் சேர்ந்தவர்கள்.
தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் தலைமை நிர்வாகியான கார்த்தியுடன் சேர்த்து பிரபு மற்றும் சுரேஷும் டிவிடி ராக்கர்ஸைச் சேர்ந்த சகோதரர்களான ஜெகன் மற்றும் ஜான்சன் ஆகியோரும் கைதாகியுள்ளார்கள்.
தமிழ் ராக்கர்ஸ் மீது தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிவிடி ராக்கர்ஸ் தளம், ராமலீலா என்கிற மலையாளப் படத்தை வெளியிட்டுள்ளது. புலிமுருகன் படத்தை இணையத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் மீது ஏழு வழக்குகள் உள்ளன.
அகில் என்பவர் 2016-ல் கைதானார். அவருக்கு ஹரியானாவைச் சேர்ந்த விளம்பர நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியதுதான் இந்த ஐந்து பேரையும் கைது செய்ய முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. அந்த மின்னஞ்சலில் தங்களுக்கு தமிழ்ராக்கர்ஸின் தொடர்பு உள்ளதாகக் குறிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அந்த விளம்பர நிறுவனம் வழியாகக் காவல்துறையினர் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தள நிர்வாகிகளைப் பிடித்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள், திருவனந்தபுரத்துக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ் ராக்கர்ஸைச் சேர்ந்த கார்த்தி, கம்ப்யூட்டர் சயின்ஸில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். இதுபோன்ற முறைகேடான இணையத்தளங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் பலரும் என்ஜினியரிங் முடித்தவர்கள். புலிமுருகன் மற்றும் ராமலீலா படத்தயாரிப்பாளர்களின் புகாரின் பேரில் இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்குகள் மற்றும் இதர சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகவல்களை ஒரு பேட்டியில் கேரளக் காவல்துறை கூறியுள்ளது.
இரு தரப்பினரின் வங்கிக்கணக்குகளைப் பார்த்ததில், கடந்த வருடம் தமிழ்ராக்கர்ஸுக்கு ரூ. 1 கோடியும் டிவிடி ராக்கர்ஸுக்கு ரூ. 75 லட்சமும் வருமானம் கிடைத்துள்ளதாகக் கேரளக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
loading...
No comments:
Post a Comment