"

Tuesday, July 2, 2019

பயன் தரும் ஆவாரைக் குடிநீர்..! மூலிகை மருத்துவம்


`` `20 வயதில் இறுமாப்பு, 30 வயதில் முறுக்கு, 40 வயதில் நாட்டம்' என்று ஒரு பழமொழி உண்டு. 40 வயதாகும்போது குழந்தைகள் வளர ஆரம்பித்ததும் சொத்து சேர்க்க வேண்டும், பணம் சேமிக்க வேண்டும் என்ற கவலையும் அதன் மீதான நாட்டமும் அதிகரிக்கும். இதனால்தான் பலருக்கும் சர்க்கரை நோயில் தொடங்கி ரத்தஅழுத்தம் உள்ளிட்ட நோய்கள் பின்தொடர்கின்றன. இந்நோய்கள் பாதிக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இல்லாததே காரணம். சித்த மருத்துவத்தின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த வழி உள்ளது. அந்த வகையில் சர்க்கரை நோய்க்கு ஆவாரையும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆடாதொடையும் முக்கியமான மூலிகைகளாகும். இதைக் கசாயமாக்கி, பருகி வந்தாலே போதும்.

`பாகற்காய் அவித்த நீரைக் குடித்தால் சர்க்கரைநோய் குணமாகும், வெண்டைக்காயை வெட்டி நீரில் போட்டு ஊறிய பிசுபிசுப்பைச் சாப்பிட்டால் சர்க்கரைநோய் குணமாகும். சிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரைகொல்லிப் பொடி சாப்பிட்டால் சர்க்கரைநோய் முற்றிலும் குணமாகும்' என்றெல்லாம் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. சர்க்கரை நோய்க்குச் சித்தமருத்துவம் பதிவு செய்து வைத்துள்ள ஒரே மூலிகை `ஆவாரை' மட்டுமே. சர்க்கரை நோயை குணமாக்குவதாகச் சொல்லப்படும் மற்ற மூலிகைகள் எல்லாம் துணை மருந்துகள்தானே தவிர, அவை மருந்தாகாது.


ஆவாரையின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயனுள்ளவை. இவை ஐந்தையும் சேர்த்துப் பயன்படுத்துவதை `ஆவாரைப் பஞ்சாங்கம்' என்பார்கள். ஆவாரைப் பஞ்சாங்கத்துடன் கொன்றைப்பட்டை, நாவல்பட்டை, மருதம்பட்டை, கடலழிஞ்சிப் பட்டை, கோரைக்கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்க வேண்டும். அதனுடன் நான்கு லிட்டர் நீர் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். ஒரு லிட்டராக வற்றியதும் அதை வடிகட்டி தினமும் நான்குவேளை குடித்துவந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும். சர்க்கரை நோய் உள்ளது எனக் கணித்துவிட்டு மருத்துவம் மேற்கொள்ள வரும் நோயாளிகளிடம் இந்த ஆவாரைக் குடிநீரை மூன்று மாதங்கள் வரைக் குடிக்கக் கொடுத்து, நல்ல முன்னேற்றம் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. `க்ரீன் டீ' என்ற பெயரில் நாம் பருகி வரும் தேநீரைவிட ஆயிரம் மடங்கு அற்புதமானது இந்த ஆவாரைக் குடிநீர்.

சாரம், செந்நீர், ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு உடல்கட்டுகளைக் கொண்டுள்ளது மனித உடல். இந்த உடற்கட்டுகளை உருக்குலையச் செய்யும் நோய் சர்க்கரைநோய் என, `தேரன் சித்தர்' அவரது 'தேரன் மருத்துவப்பாரதம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆவாரைக் குடிநீர் ஏழு உடற்கட்டுகளையும் வலிமைப்படுத்தும் தன்மை உடையது. உடல் துர்நாற்றம் நீங்க, தலைமுடி சீராக வளர, உடலில் மினுமினுப்பு ஏற்படுத்த என பல்வேறு பிரச்னைகளைச் சரிசெய்வதால்தான் `ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..!' என்று சித்தர் பாடல் வரிகள் எடுத்துரைக்கிறது.


நாற்பது

வயதைத் தொட்டவர்களுக்கு பரவலாகக் காணப்படும் அடுத்த பிரச்னை ரத்தஅழுத்தம். காரணமே இல்லாமல் வரும் உயர் ரத்தஅழுத்தநோயை `இடியோபதிக் ஹைப்பர் டென்ஷன்' என்பார்கள். இதைத் தமிழ் சித்தமருத்துவத்தில் `குருதியழல்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் ரத்தஅழுத்தநோய்க்கு சரியான மருந்து ஆடாதொடை இலைப்பொடிதான். `ஆடு தொடா இலை' என்பது நாளடைவில் மருவி `ஆடாதொடை' என்று ஆனது. ஆடாதொடை இலைகளைப் பறித்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கி மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால், நாளடைவில் ரத்தஅழுத்தம் சரியாகும்.


100 கிராம் ஆடாதொடை இலைப் பொடியுடன் இரண்டு கிராம் சிற்றரத்தைப்பொடி, இரண்டு கிராம் அதிமதுரப்பொடி சேர்த்து ஒரு லிட்டர் நீர் சேர்த்துக் சுண்டக் காய்ச்ச வேண்டும். கால் லிட்டரானதும் வடிகட்டி தினமும் நான்குவேளை குடிக்க வேண்டும். இப்படிக் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல் நுரையீரல், சளி தொடர்பான நோய்களும் குணமாகும். தினமும் இதுபோலக் காய்ச்சி ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரைகூட குடித்து வரலாம்" என்றார்.



இறுதியாக, ``40 வயது ஆனதும் மூட்டுவலி, கை, கால் வலி, உடல் சோர்வு ஆகியவையும் பற்றிக்கொள்ள ஆரம்பிக்கும். இவற்றிலிருந்து விடுபட எண்ணெய்க் குளியல் நல்லது. எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெயே சிறந்தது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் குளிக்கலாம். நல்லெண்ணெய்யில் சிறிதளவு மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சிவக்கக் காய்ச்சி வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய்க் குளியலுக்கு உகந்த நேரம். எண்ணெய் தேய்த்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குளித்து விடுவது நல்லது" என்கிறார் மைக்கேல் ஜெயராஜ்.

No comments:

Post a Comment

Adbox