``உலகில் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும். என் நாட்டில், எனக்கு இலவச மருத்துவ வசதி கிடைத்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது." - உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் உதிர்த்த வார்த்தைகள் இவை. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல், சிறந்த மனிதநேயவாதியாகவும் திகழ்ந்தவர். இன்றைக்கு, பல லட்சம் இளைஞர்கள் பிரபஞ்சவியலைப் (Cosmology) பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதற்கு முழுமுதற் காரணம் இவர்தான். பிரபஞ்சவியலில் சாதித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அறிவியலாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். தனது 76-வது வயதில் இன்று காலை காலமானார்.
பிரபஞ்சவியலில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த இவர், பிளாக் ஹோல் (Black Hole), பிக்பேங் தியரி (Bigbang Theory) ஏலியன் (Alien), டைம் மெஷின் (Time Machine) என அந்த அறிவியல் துறையில் சாதித்த விஷயங்கள் ஏராளம்.
ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற்ற ஒருவராலேயே நினைத்துப் பார்க்க முடியாதவை அவர் புரிந்த சாதனைகள். அவருக்கு 'Amyotrophic Lateral Sclerosis' என்ற குறைபாடு இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தப் பாதிப்புக்குள்ளான ஸ்டீபன் ஹாக்கிங் அதனால் சற்றும் மனம் தளர்ந்து போய்விடாமல் எண்ணற்ற சாதனைகளைப் படைத்தார்.
" ஸ்டீபன் ஹாக்கிங் 'Anterior horn cell disease' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பொதுவாக, நம் மூளையிலிருந்து மூன்று வரிசைகளாக (order) நரம்புகள் வெளியே செல்லும். மூளையிலிருந்து நேரடியாக முதுகெலும்புக்குச் செல்வது முதல் வரிசை. அடுத்ததாக, முதுகெலும்பிலிருக்கும், Anterior horn cell என்ற இடத்திலிருந்து கை, கால்களுக்குச் செல்லும் நரம்புகள் இரண்டாவது வரிசை. இதில் Anterior horn cell பாதிக்கப்பட்டால், நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் தடைபடும். உதாரணமாக, கை, கால் நரம்புகள் செயலிழந்து போகும். உடலை அசைக்க முடியாது. பேச்சு வராது. எதையும் விழுங்குவதற்குச் சிரமமாக இருக்கும். மூளை, கையைத் தூக்க வேண்டும் என்று நினைத்தாலும் கை, கால்களை அசைக்க முடியாது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது, `புரொக்ரஸ்ஸிவ் டிஜெனரேட்டிவ் டிசீஸ்' (Progressive degenerative disease). செல்களை முழுமையாகச் சிதைத்துவிடும். ஒருமுறை இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், பின்னர் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம். இது 'Amyotrophic Lateral Sclerosis' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஸ்டீபன் ஹாக்கிங்கும் இந்தப் பாதிப்புக்குத்தான் ஆளாகியிருந்தார். இதனால் சுவாச மண்டலமும் பாதிப்படையும். ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இரண்டு முறை ட்ரக்கியோஸ்டமி (Tracheotomy) செய்யப்பட்டிருக்கிறது. தன் 40-வது வயதில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங், ஐம்பது வயதில் வீல்சேரில் அமரும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ஒருமுறை பேசும்போதே ரத்த வாந்தியும் எடுத்திருக்கிறார்.
இந்தப் பாதிப்பில் கை, கால்கள் செயலிழந்து போனாலும், மூளை சிறப்பாகச் செயல்படும். அதற்கு, ஆகச்சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங் இருந்தார்" என்கிறார் நரம்பியல் துறை நிபுணர் குணசேகரன்.
இத்தனை பாதிப்புகளையும் தாண்டி எப்படிச் சாதித்தார் ஸ்டீபன் ஹாக்கிங்?
"ஸ்டீபன் ஹாக்கிங் இந்தப் பாதிப்புக்கு ஆளானபோது, அவர் இன்னும் கொஞ்ச காலம்தான் உயிர் வாழ்வார் என்று அனைவரும் நினைத்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. அவர் உடலிலுள்ள தசைகளின் இயக்கம் முழுமையாக நின்று போனது. பேசவும் முடியாமல் போனது. ஒருவேளை உயிர்வாழ்ந்தாலும்கூட கோமா நிலையில்தான் இருப்பார் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். `ஸ்டீபன் ஹாக்கிங் சாப்டர் குளோஸ்' என்ற முடிவுக்கே பலரும் வந்திருந்தார்கள். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் அப்படி நினைக்கவில்லை. வாயால் பேச முடியாவிட்டாலும், சைகையின் மூலமாகப் பேச முயற்சி செய்தார்.
கம்ப்யூட்டர் துறையும் அப்போதுதான் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. இது ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு மிக சாதகமாக அமைந்துபோனது. விரல் அசைவின் மூலமாக தட்டச்சு செய்து, அதை கம்ப்யூட்டரைப் பேசவைத்து மற்றவருடன் கம்யூனிகேஷன் வைத்துக்கொண்டால்? அதற்கும் வழி பிறந்தது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் நண்பர் ஒருவர் இதற்காகவே, இவருக்காகவே பிரத்யேகமான சாஃப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார். அதன் உதவியோடு பிறரிடம் பேசிவந்தார் ஸ்டீபன். அவரால் பிறர் பேசுவதைக் கேட்க முடியும் என்பதால் இந்த கம்ப்யூட்டர்வழி தகவல் பரிமாறும் வசதி எளிதாக இருந்தது.
தன் இறுதி ஆண்டுகளில், பேச நினைப்பதை முகம் மற்றும் தாடை அசைவின் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யும் இயந்திரத்தின் உதவியோடு பேசினார்.
'பிளாக் ஹோல்', `பிக் பேங்க்' ஆகிய இரண்டையும் இவர் கண்டுபிடிக்கவில்லையென்றாலும்கூட, அவற்றை இன்று பரவலாக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதற்கு இவர்தான் காரணம். காஸ்மாலஜியை ஒரு மதிப்பு மிக்க அறிவியலாக மாற்றியவர் ஸ்டீபன் ஹாக்கிங். வெறும் கருதுகோளாக, யூகங்களாக மட்டுமே இருந்த பிரபஞ்சவியலை, ஆராய்ச்சிகளை நோக்கி முன்னேறச் செய்ததில் இவரின் பங்கு அளப்பரியது. அதற்கான பாதைகளையும் அவரே வகுத்துத் தந்திருக்கிறார்.
மிகச்சிறந்த கணிதவியலாளர். இறுதிவரை புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார். அதேபோல, தான் கண்டுபிடித்த விஷயங்களையே மீள்பார்வை செய்து அதில் மாற்றங்கள் இருந்தால், அதை ஒப்புக்கொண்டு வெளி உலகுக்குச் சொன்னவர் அவர். உதாரணமாக, ஆரம்பத்தில் `பிளாக் ஹோல்களுக்கு மரணமே இல்லை' என்றார். பின்னர், அதை மீளாய்வு செய்து, அதுவும் அழிந்து அதற்குள்ளிருந்த ஆற்றல் பிரபஞ்சத்துக்குள் திரும்பி வரும் என்பதைக் கண்டறிந்து உலகுக்குச் சொன்னவர் அவர்தான்.
loading...
ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் காஸ்மாலஜியின் சுவையை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில், தன் மகளின் உதவியோடு புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.விஞ்ஞானியாக, சிறந்த பகுத்தறிவுவாதியாக, மனிதநேயமிக்கவராகத் திகழ்ந்தார். தன் சொந்த நாடான இங்கிலாந்தும், கூடவே அமெரிக்காவும் அணுகுண்டுகளை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தவர். `அது மனிதகுலத்துக்கு எதிரானது' என்றும் குரல் கொடுத்தவர்.
தன் நாடான இங்கிலாந்திலிருப்பதுபோல் (NHS - National Health Service) இலவச மருத்துவ சிகிச்சை உலகிலிருக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றவர். `தரமான கல்வியையும், தரமான மருத்துவத்தையும் இலவசமாக வழங்கும் நாடுதான் வளர்ந்த நாடு' என்று தொடர்ந்து பேசிவந்தவர்.
தேர்வில் இரண்டு மதிப்பெண் குறைந்து போனாலே தற்கொலை செய்துகொள்ளும் இன்றையச் சூழலில் மிகக் கொடுமையான உடல் பாதிப்புக்குள்ளாகியிருந்தும், எண்ணற்ற சாதனைகள் புரிந்தவர். அவரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் `தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?' அறிவியலுக்கு மகத்தான இழப்பு அவரது மரணம்'' என்கிறார் மத்திய அரசின் விக்யான் பிரசார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், எழுத்தாளருமான தா.வி.வெங்கடேஷ்வரன்.
Source
Vikatan.
No comments:
Post a Comment