ஹாலிவுட் படங்களில் வரும் விண்வெளி சண்டைக் காட்சிகளைப் போல இனி வரும் காலங்களில் சண்டைகள் நடக்கலாம்.
அதற்குத்தான் அமெரிக்கா தயாராகிவருகிறது. அமெரிக்க துணை அதிபர் Mike pense “தரையிலும், நீரிலும், காற்றிலும் போலவே விண்வெளியிலும் அமெரிக்க ராணுவம் ஆதிக்கம் செலுத்தும்” என்று கூறியிருந்தார். அவர் கூறியது இந்த ஸ்பேஸ் ஃபோர்ஸைத்தான். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை, மெரின் கார்ப்ஸ் (marine corps), கோஸ்ட் கார்டு (coast guard) இந்த வரிசையில் அமெரிக்காவின் ஆறாவது படைதான் "ஸ்பேஸ் ஃபோர்ஸ்".
2007 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விண்வெளியில் சுற்றித்திரிந்த பழைய செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியது. இல்லை சிதைக்கப்பட்டது. அதற்கு ஒரு வாரம் கழித்து அமெரிக்க பத்திரிகைகள் சீனாவை சந்தேகித்து எழுதியிருந்தன. உலகம் முழுக்க எழுந்த சந்தேக சுனாமிக்குப் பிறகு ஜனவரி 23 ஆம் தேதி சீனாவே அத்தகைய வெடிப்பை ஏற்படுத்தியதை ஒத்துக் கொண்டது. இம்முறை ஆயுட்காலம் காரணமல்ல. செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் Anti sattelite Missile- ஐ தன்மீதே பரிசோதித்துள்ளது சீனா. 1979 ஆம் ஆண்டு வானிலை பற்றி ஆராய சீனாவால் அனுப்பப்பட்டதுதான் அந்த Fengyun 1c செயற்கைக்கோள். “2008 ல் அமெரிக்காவும் தன் திறமையை நிரூபிக்க, தனது பழைய செயற்கைக்கோளொன்றை சுட்டு வீழ்த்தியது.
ஒரு நாட்டின் பொருளாதாரமே செயற்கைக்கோள்களால் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றது. ராணுவம், தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு என அனைத்துமே செயற்கைக்கோள்களின் சித்து வேலையின்றி எவ்வாறு முழுமைபெறும்? இத்தகைய செயற்கைக்கோள்களை அழித்தாலே போதும். எந்தவித உயிர்சேதமின்றி ஒரு நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்தை உருவியெடுத்து விடலாம். சர்வநாசம் நிச்சயம். எனவேதான் எல்லைகள், குடிமக்கள், இயற்கை வளங்களைப் போல செயற்கைக்கோள்களையும் ராணுவம் பாதுகாக்க வேண்டும். உதாரணமாக இந்தியாவில் அனைத்து ATM களுமே Vsat எனும் செயற்கைக்கோள்களின் உதவியைதான் நம்பியுள்ளன. இது ஒன்றை இழந்தால்? விளைவு உங்கள் கற்பனைக்கே.
அடுத்த ஆண்டுக்குள் 600 கைதேர்ந்த விமானப்படை வீரர்களைக் கொண்டு அமெரிக்காவின் "ஸ்பேஸ் ஃபோர்ஸ்" தயாராகிவிடும். அதற்கடுத்த ஆண்டுகளில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டலாம். விண்வெளியில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்களையும் சர்வதேச விண்வெளி வீர்களையும் பாதுகாப்பதே இதன் முதல் கடமையாகும்.ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்கள் இப்படையின் சிறப்பம்சம். எதிரி செயற்கைக்கோளை உளவு பார்த்தல், தேவைப்பட்டால் எதிரி செயற்கைக்கோளினை தாக்குதல், சக ராணுவத்திற்கு உதவி செய்தல் போன்றவை இதன் வேலைகள்.
No comments:
Post a Comment