"

Thursday, February 28, 2019

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்



இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார். அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பார்லிமெண்ட்டில் பேசிய இம்ரான் கானின் பேச்சு அந்நாட்டு வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய பேச்சுக்கள் என சொல்லலாம். ஆமாம், இம்ரான் கான் பேசுகையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி எம்பிக்கள் என யாரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கரகோஷத்துடன் வரவேற்றது மெய் சிலிர்க்க வைத்துள்ளது.


இன்று பார்லிமெண்ட்டை கூட்டி அவர் நிகழ்த்திய அந்த உரை சிறப்பானதாக அமைந்துள்ளது. அவையில், இந்த அவையில் என் அழைப்பை ஏற்று வருகை புரிந்த எல்லோருக்கும் நன்றி. இந்தியாவின் கோபத்திலும், தாக்குதலிலும் கூட பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்தது. போரிலும் சண்டையிலும் செலவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கே செலவு செய்ய எனக்கு விருப்பம். பாகிஸ்தானில் மிக ஒழுக்கமாக செயல்பட்ட ஊடகங்களுக்கு நன்றி. புல்வாமா தாக்குதல் போன்ற மோசமான தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா?. அந்த முட்டாள்தனத்தை எப்படி பாகிஸ்தான் செய்தது என்று இந்தியா கூறுகிறது. எப்படி எங்கள் மீது இதில் பழி போடுகிறார்கள்.


புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முன்பே ஆதாரங்களை அளித்து இருக்கலாம். முன்பே அப்படி செய்திருந்தால் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன்பே இந்தியா ஆதாரங்களை அளித்து இருந்தால் நாங்கள் அதை விசாரித்து இருப்போம்.

இந்த விவகாரம் குறித்து, இந்தியா - பாக் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் பேச முயன்றேன். நான் நேற்று பேச முயற்சி செய்தேன். மெசேஜ் கூட அவருக்கு அனுப்பினேன். பாகிஸ்தானுக்கு எப்போதும் அமைதிதான் முக்கியம். பாகிஸ்தானின் அமைதியை மற்ற நாடுகள் கோழைத்தனமாக நினைக்க கூடாது. நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுதான் நல்லது.


எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன். இந்தியாவின் அரசின் செயல்கள் பலருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும். இந்திய அரசின் சில செயல்பாட்டில் குற்றம் இருப்பதை இந்தியர்கள் சீக்கிரம் புரிந்துகொள்வார்கள். நாங்கள் மக்களின் நன்மை கருதியும், அமைதி கருதியும் பாகிஸ்தானில் உள்ள அபிநந்தனை விடுதலை செய்கிறோம். நாளை அவர் விடுதலை செய்யப்படுவார், என்று இம்ரான் கான் பேசி இருக்கிறார் அவையில் அவர் இதை கூறியது பெரிய கரகோஷம் எழுந்தது. அதுமட்டுமல்ல ஆளும்கட்சி எதிர்க்கட்சிகள் என அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.

அபிநந்தனை மீட்பதில் இந்தியாவின் தொடர் நடவடிக்கைகள், உலக நாடுகளின் அழுத்தம், உள்ளிட்டவற்றிற்கு அடி பணிந்த பாகிஸ்தான், இன்று மாலை அவசர அவசரமாக, அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தை கூட்டியது.

அதில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான், இந்தியாவுடன் போர் புரிய விரும்பவில்லை என்றும், நல்லெண்ண மற்றும் அமைதியை விரும்பும் நோக்கத்தில், அபிநந்தனை நாளை, இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்தார்.



No comments:

Post a Comment

Adbox