"

Tuesday, August 7, 2018

அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்யத் தடை இல்லை: வழக்குரைஞர் துரைசாமி

சென்னை காமராஜர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குரைஞர் துரைசாமி கூறியுள்ளார்.

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டது சட்டவிரோதமான செயல். எனவே சமாதியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்குரைஞர் துரைசாமி உள்ளிட்டோர் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை காரணம் காட்டித்தான் தற்போது கருணாநிதிக்கு மெரீனாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் திமுக தொண்டர்கள், தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மெரீனாவில் நினைவிடம் அல்லது சமாதி அமைக்க உயர்நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காத நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சி தருவதாக சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான வழக்குரைஞர் துரைசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்துதான். அது கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அண்ணா நினைவிடமானது, கூவம் நதிக்கரையில்தான் அமைந்துள்ளது. அது கடற்கரை ஒழுங்குமுறை விதிக்கு உட்படாது.
எனவே, அங்கு கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை, சட்டப் பிரச்னையும் இல்லை. ஜெயலலிதா நினைவிடம்தான் சட்டத்திற்கு புறம்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல் அடக்கத்திற்காக எனது வழக்கை வாபஸ் பெறவும் நான் தயாராக இருக்கிறேன் என் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Source
Dinamani. 

No comments:

Post a Comment

Adbox