தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் வகையில் ' ப்ளுபிரிண்ட்' அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறையை கொண்டு வந்துள்ளது. பல தனியார் பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடங்களை நடத்தி ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் பயிற்சி அளித்து மனப்பாடம் செய்து படிக்கும் முறையில் மாணவர்களை தயார்படுத்தி வந்துள்ளது.
இதன் காரணமாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் நடைபெறும் தகுதி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற இயலாத நிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் கொண்டுவந்துள்ள மாற்றங்களில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டிற்கும் இரண்டு தாள்களுக்கு பதிலாக இந்த ஆண்டு முதல் ஒரு தாள் மட்டும் தேர்வு எழுத உத்தரவிட்டுள்ளது, இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மணி நேர தேர்வு நேரத்தை இரண்டரை மணி நேரமாக குறைத்தும், 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண் முறையினையும், அதேபோல் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் கேள்விகள் கேட்டு வந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு முதல் பாட புத்தகத்தில் முழுமையாக கேள்விகள் கேட்கும் முறையினை கடந்த ஆண்டு 10 மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் மாணவர்கள் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் படித்து புரிந்து கொண்டால் மட்டுமே பதில் அளிக்க முடியும், மேலும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பயிற்றுவித்து தேர்ச்சி பெறக்கூடிய நிலையை இனி உருவாக்க இயலாது.
அனைத்து பகுதிகளையும் பயிற்றுவித்தால் தான் மாணவர்களின் தரத்தினை உயர்த்த முடியும். இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும், அரசின் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும் புத்தகத்தின் கருத்துக்களை நன்கு படித்து உணர்ந்து அதனடிப்படையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.
நிகழ் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாளில் தோராயமாக 20 சதவீதம் வினாக்கள் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் இருப்பது அவசியம். மனப்பாடக் கல்வியை கைவிட்டு புரிந்து கொள்ளும் கற்றல் திறனை அதிகரிக்கச் செய்தால் மாணவர்கள் அகில இந்திய அளவிலான அனைத்து நுழைவு தேர்வுகளிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்ணை பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment