பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஒரு வருடத்திற்கான சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புத்தாக்க பயிற்சிக்காக சென்றிருந்த போது உயர் அதிகாரிகள் மூலம் மாணவிகளுக்கு 'ஆப்பர்சூனிட்டி' கிடைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றார்.
இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதில் தொடர்புடைய கறுப்பு ஆடுகள் அனைத்தும் களையெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நிர்மலாதேவியை கடந்த 4 நாட்களாகவே துருவி துருவி விசாரித்து வருகின்றனர் சிபிசிஐடி போலீசார்.
தனக்கு தெரிந்த விபரங்களை கூறி வருகிறார். அவர் கூறிய விபரங்கள் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர் சிபிசிஐடி அதிகாரிகள்.
பாலியல் தொந்தரவு தாங்காத சிலர் கல்லூரியில் இருந்து டி.சி வாங்கிக் கொண்டு வெளியேறிவிட்டனர். சிலர் நிர்வாகத்தின் கவனத்துக்கும் புகார்களைக் கொண்டு சென்றனர். அவர்களை மிக எளிதாக சரிக்கட்டிவிட்டனர் இந்தப் பேராசிரியர்கள். விருப்பமிருந்தால்தான் அனைத்தும், இதனால் எங்களுக்கு எந்தவித நஷ்டமுமில்லை என வெளிப்படையாகவே பலரை மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் நிர்மலா பணிபுரியும் கல்லூரி நிர்வாகிகள், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைவரையும் வளையத்தில் கொண்டு வந்தால்தான், பாலியல் வலையின் மூலத்தை அறிய முடியும் என்பதால் கடந்த ஒரு வருடமாகவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த போது அவரை பார்க்க வந்தவர்கள் யார் யார் என்று சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
விருந்தினர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை ஆராயும் சிபிசிஐடி அதிகாரிகள், புத்தாக்க பயிற்சிக்காக நிர்மலா தங்கி இருந்த விடுதியிலும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஆடியோ லீக் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஆராய்ச்சி மாணவரும் பேராசிரியருமான கருப்பசாமி நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நிர்மலா தேவி சொன்ன இரண்டு பெயர்கள், முருகன், கருப்பசாமிதான். இதில் முருகன் சிக்கிய நிலையில் கருப்பசாமி தலைமறைவாக இருக்கிறார். இதனையடுத்து அவரது சொந்த ஊரில்
கருப்பசாமியின் நெருங்கிய நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் கருப்பசாமி நண்பர்கள் அண்ணாதுரை மற்றும் முனீஸ்வரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு வருட சிசிடிவி காட்சிகளை ஆராயும் பட்சத்தில் எந்தெந்த முதலைகள் சிக்குமோ? பெருந்தலைகள் பலரது தலைகள் உருளுமோ என்று தெரியவில்லை.
source: oneindia.com
No comments:
Post a Comment