"

Friday, April 20, 2018

ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள்


தமிழக-ஆந்திர எல்லையோரத் தீவுக் கிராமத்தில் வாழும் மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்ல படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.தமிழ் நாட்டுக்கும், ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்திருக்கும் பழவேற்காடு ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள தீவுதான் "எருக்கம்".
எருக்கம் பஞ்சாயத்தின்கீழ் வரும் இரண்டு கிராமங்களில் மொத்தம் 2000 பேர் வாழ்கின்றனர்.13 கிலோமீட்டர் பரப்புடையதான இந்த தீவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தமிழ் பேசுகின்றனர்.

எருக்கம் என்கிற இந்த தீவிலுள்ள பீமுனிவாரி பாலம் மற்றும் உன்னாம்பு குளம் என்ற இரு ஆற்றங்கரைகளும் ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாடு மாநிலங்களின் எல்லைகளில் உள்ளன.
8 கிலோமீட்டர் படகில் செல்லுகின்ற இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், மேலும் 5 நிமிடங்கள் சகதியான நிலப்பகுதியை கடந்து பள்ளியை சென்றடைய வேண்டியுள்ளது.
தமிழ் மொழியில் படிக்க விரும்புவோர் தமிழ் நாட்டில் அமைந்துள்ள ஒரு பள்ளியிலும், தெலுங்கு மொழியில் படிக்க விரும்புவோர் ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிக்கும் செல்கிறார்கள்.

இந்த தீவில் இருக்கின்ற இரண்டு பள்ளிகளில் ஒன்று 1931ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இருப்பினும், இந்த இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பாததால், இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.
"தண்ணீரில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், குழந்தைகள் வீடு வந்து சேரும் வரை பதற்றமாக இருக்கும். இங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், எங்கள் குழந்தைகளை படகில் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்" என்று அந்த கிராமத்தை சேர்ந்த லாவண்யா பிபிசியிடம் தெரிவித்தார்.

இதே கவலையை வெளியிட்ட மணவர் அபி, கிராமத்திலுள்ள பள்ளியில் ஆசிரியர் நியமிக்கப்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார்.
படகில் பயணிப்பது ஆபத்து என்பதால், தமிழ் மொழியில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசு உயிர்க் காப்பு ஆடைகளை வழங்கியுள்ளது.

தெலுங்கு மெழி படிக்கின்ற மாணவர்களுக்கு இத்தகைய உயிர்க் காப்பு ஆடைகளை வழங்க ஆந்திரப் பிரதேச அரசிடம் இருந்து முயற்சிகள் எதுவும் இல்லை.
படகில் அதிக இடம் இல்லாமல் இருப்பதால், பயணம் மேற்கொள்கிறபோது பெரும்பாலான மாணவர்கள் தங்களின் உயிர் காப்பு ஆடைகளை கழற்றி வைத்துகொள்வர் என்று அபி குறிப்பிடுகிறார்.

மழை காலங்களில் நீர்மட்டங்களில் ஏற்படுகின்ற மாற்றம் படகில் பயணம் மேற்கொள்வதில் ஏற்படும் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, சில பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை தடா மற்றும் அரும்பாக்கம் கிராமங்களில் வாழும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்க செய்து பள்ளிக்கு அனுப்பி கல்வியை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த எரிக்கு மேல் பாலம் ஒன்றை கட்டுவதில், தொழில்நுட்ப, நிதி மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் நிறைந்துள்ளன.

தங்கள் குழந்தைகள் ஆற்றை கடந்து செல்வதை நிறுத்துவதற்கு, இந்த கிராமத்திலுள்ள பள்ளியில் ஆசிரியர்களை நியமிப்பதே ஒரே தீர்வு என்று இந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த படகு விபத்துகளை நினைவுகூர்ந்த தனசேகர், 5 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தங்கி கல்வி கற்றுகொடுக்க யாருக்கும் மனம் வராததால், ஆற்றை தாண்டி பிற கிராமங்களில் படிக்க குழந்தைகளை அனுப்புவதாக தெரிவிக்கிறார்.

இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மீனவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாக இருப்பதால், இங்கு தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ வேண்டுமென்று இந்த எருக்கம் கிராமத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மறுபுறம், தெலுங்குப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று இந்த கிராமத்திலுள்ள தலித்துக்கள் கேட்கின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளும் வசதி கொண்ட ஆங்கில மொழி வழிப் பள்ளி வேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனர்.
Thanks to
BBC news. 

No comments:

Post a Comment

Adbox