காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் சேர முக்கிய காரணமாக இருந்த மேஜர் ஜெனரல் எஸ்.பி.மகாதேவன் காலமானார். அவருக்கு வயது 92.
இந்தியாவின் பழைமையான படைப்பிரிவான மெட்ராஸ் ரெஜிமென்டின் முதல் பட்டாலியன் கேப்டனாக மகாதேவன் பணியாற்றினார். 1947-ம் ஆண்டு, சர்தார் வல்லபாய் படேலின் உத்தரவின் பேரில் இவர் தலைமையிலான மெட்ராஸ் ரெஜிமென்டின் முதல் பட்டாலியன் படைதான் காஷ்மீர் பள்ளதாக்குக்குள் நுழைந்தது. காஷ்மீர் ராஜா ஹரி சிங்குக்கு உதவியாக இருந்தது இந்தப் படைதான். கொல்கத்தாவில் நிகழ்ந்த கலவரத்தின்போது, மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பும் இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. ஐ.நா அமைப்புக்காகக் காங்கோ நாட்டிலும் பணியாற்றியுள்ளார். வங்கதேசப் போரின்போது கிழக்கு கமாண்ட் படைப் பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜகித் சிங் அரோரா தலைமையில் போர் திட்டங்களை வகுத்தார். பாகிஸ்தான் வீழ்ந்ததையடுத்து, ஆதி விஷிஸ்த் சேவா பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 1972-ம் ஆண்டு மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார். `ATNK&K' எனப்படும் தென்மாநில ராணுவத் தலைவராகவும் இருந்தார். 1978-ம் ஆண்டு ஆந்திராவைப் புயல் தாக்கியது. அப்போது, இவர் தலைமையில் மீட்புப் பணிகள் சிறப்பான முறையில் நடந்தது. குடியரசு முன்னாள் தலைவர் வி.வி.கிரியின் இறுதிச்சடங்கை இவர்தான் முன்னின்று நடத்தினார். அப்போது , தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் நன்மதிப்பை பெற்றதையடுத்து, தமிழ்நாடு தேர்வாணயத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். பழநியைச் சேர்ந்த எஸ்.பி.மாகதேவன் முதுமை காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். ஓய்வுக்குப் பிறகு, பல்வேறு நாட்டு நலப்பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.இந்தத் தகவலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment