"

Monday, March 19, 2018

எந்தெந்த நோய்களுக்கு எப்படியெப்படி தூங்கணும்


நம் வாழ்நாளில் ஒரு பகுதியை தூக்கத்தில் தான் செலவிடுகிறோம். அந்த அளவில் தூக்கம் ஒருவரது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த எவ்வளவு அவசியமாக உள்ளது என்று நினைத்துப் பாருங்கள். தூக்கம் என்று வரும் போது, தூங்கும் நிலையும் அதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆரோக்கிய நிபுணர்களும், நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நம் உடலில் உள்ள சில பிரச்சனைகளைத் தடுக்க எந்த நிலையில் தூங்குவது சிறந்தது என்று பரிந்துரைத்துள்ளனர். இதுக்குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே இக்கட்டுரையில் உடலில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்க எந்த நிலையில் தூங்குவது நல்லது என்று தெரிவித்துள்ளோம்.
** தோள்பட்டை வலி
தோள்பட்டை வலி உள்ளவர்கள், வலது அல்லது இடது பக்கமாக தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
அதேப் போல் குப்புறப்படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
தோள்பட்டை வலியில் இருந்து விடுபடவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மல்லாக்கப் படுப்பதே சிறந்தது. அப்படி படுக்கும் போது, தலை மற்றும் வயிற்றில் ஒரு ஆர்தோபெடிக் தலையணையை வைத்து, வயிற்றில் உள்ள தலையணையை பிடித்தவாறு தூங்குங்கள்.
ஒருவேளை உங்களால் மல்லாக்க படுக்க முடியாவிட்டால், உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் நிலையில் படுங்கள். ஆனால் அப்படி படுக்கும் போது, தோள்பட்டையில் வலி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
** முதுகு வலி
முதுகு வலி இருப்பவர்கள் மல்லாக்கப் படுத்து, முழங்காலுக்கு அடியில் ஆர்தோபெடிக் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும். அதே சமயம் அடி முதுகுப் பகுதியில் சற்று தடிமனான துணியை வைத்துத் தூங்குங்கள்.
ஒருவேளை உங்களுக்கு குப்புற படுக்க பிடிக்குமானால், தலையணையை வயிற்றுப் பகுதியில் வைத்துத் தூங்குங்கள். வலது அல்லது இடது பக்கமாக தூங்க விருப்பமிருந்தால், முழங்காலை மடக்கி, சற்று குறுகிய நிலையில் தூங்குங்கள்.
** கழுத்து வலி
கழுத்து வலி இருப்பவர்கள், ஆர்தோபெடிக் தலையணையின் மேல் இரண்டு கைகளையும் தலைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். ஒருவேளை பக்கவாட்டில் படுப்பதாக இருந்தால், உயரமான தலையணையைப் பயன்படுத்தாதீர்கள். தோள்பட்டை அளவிலான உயரத்தைக் கொண்ட தலையணையைத் தான் பயன்படுத்த வேண்டும்.
அதுவே குப்புற படுப்பதாக இருந்தால், தட்டையான தலையணையைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இரவு முழுவதும்ஒரே நிலையில் தூங்காமல், அடிக்கடி நிலையை மாற்றினால் தான், வலி அதிகமாவதைத் தடுக்கலாம்.
படுத்ததும் தூங்க முடியவில்லையா? அப்படியெனில் தூங்கும் போது, மொபைல், டிவி போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்ப்பதோடு, காபி, ஆல்கஹால், எனர்ஜி மற்றும் சோடா பானங்கள், சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதை தூங்குவதற்கு 6 மணிநேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தூங்கும் அறையில் வெளிச்சம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படுத்ததும் தூங்க இன்னும் ஒரு சிறந்த வழி என்றால், அது காலையில் உடற்பயிற்சியை செய்வது தான்.
** குறட்டை விடுபவர்கள்
குறட்டை விடுபவர்கள், குப்புறப்படுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குப்புறப் படுக்கும் போது, அது மூச்சு விடுவதில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் நேராக படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மென்மையான தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். இத்தகையவர்களுக்கு வலது அல்லது இடது பக்கமாக தூங்குவது தான் சிறந்தது.
** கால் வலி
தூங்கும்போது கால் வலி மற்றும் தசைப் பிடிப்புக்கள் இருந்தால், சரியாக தூங்கவே முடியாது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள், கால்களுக்கு அடியில் ஒரு உயரமான தலையணையை வைத்து தூங்குங்கள். மேலும் தூங்கும் முன் கால்களை மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக காப்ஃபைன் கலந்த பானங்கள் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.
** நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், இடது பக்கமாக தூங்குவதே சிறந்தது. மேலும் இரவு நேரத்தில் காரமான உணவுகளையோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றை சாப்படுவதையோ தவிர்த்திடுங்கள்.

No comments:

Post a Comment

Adbox