பி ரதமர் மோடியின் பாசத்துக்குரியவராக இருந்த சந்திரபாபு நாயுடு, யூடர்ன் அடித்துள்ளார். ஆந்திராவில் பாரதிய ஜனதா - தெலுங்கு தேசக் கட்சிகளின் தேனிலவு முடிந்து, டைவர்ஸ் வரை வந்துவிட்டது. தமிழகத்தில் செய்வதுபோன்றே ஆந்திராவிலும் உள்ளடி வேலைகளுக்கு மோடி முயற்சி செய்வதாகவும், ஆனால் பலன் கிடைக்கவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். `தென் மாநிலங்கள் செலுத்தும் வரியில்தான், வடமாநிலங்கள் வாழ்கின்றன' என்கிற சந்திரபாபுவின் வார்த்தை பிரயோகம், பக்கத்து மாநில முதலமைச்சர்களையும் யோசிக்கவைத்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் ``முன்னேறிய தென்மாநிலங்கள், மக்கள்தொகை நிறைந்த வடமாநிலங்களுக்குப் படியளக்கின்றன'' என்று ஆந்திர முதலமைச்சருக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து பெறும் மானியங்களைவிட அதிகமாக வரி செலுத்துகின்றன என்பது உண்மைதான். அதேவேளையில் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 1.79 பைசாவாகத் திரும்பப் பெறுகிறது. கர்நாடகா ஒரு ரூபாய் வரி கட்டினால் 0.47 பைசாதான் திரும்பக் கிடைக்கும். தென்மாநிலங்களின் நிலை இதுதான்.
இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகை 20 கோடிக்கும்மேல். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உத்தரப்பிரதேசத்தின் பங்களிப்பு என்னவெனப் பார்த்தால், 230 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நாட்டின் மொத்த ஜி.டி.பி உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது உத்தரப்பிரதேசம். வரி செலுத்துவதில் மட்டுமல்ல, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் தென்மாநிலங்கள்தான் முன்னிலையில் உள்ளன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஓர் ஆண்டில் மொத்த உற்பத்திப் பொருள்களின் மதிப்பை அந்தப் பொருளின் மொத்த உற்பத்தி அளவுடன் பெருக்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும்) 2.25 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். 2014-ம் ஆண்டு கணக்கின்படி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 778 பில்லியன் டாலர்கள் அளவுக்குப் பங்களிப்பை அளித்துள்ளன. இது, மூன்றில் ஒரு பாகம்.
இந்தியாவிலேயே பணக்கார மாநிலம் மகாராஷ்டிரம். நாட்டின் மொத்த அனல்மின் உற்பத்தியில் 13 சதவிகிதமும், அணுசக்தி மின்சார உற்பத்தியில் 17 சதவிகிதமும் அளித்து மின் உற்பத்தியில் நாட்டின் முதல் இடத்தில் உள்ள மாநிலம். மும்பையில் உள்ள நிறுவனங்கள்தான் பங்கு வர்த்தகத்தில் 70 சதவிகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளன. சர்வதேச வர்த்தகம், சினிமா, தொழில்துறை என, பல துறைகளிலும் மும்பை கோலோச்சுகிறது. விமானசேவை, ஃபேஷன், டெக்னாலஜி, டெக்ஸ்டைல் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் அலுவலகத்தை இங்கே அமைத்துள்ளன. 2017-ம் ஆண்டு இந்த மாநிலத்தின் மொத்த ஜி.டி.பி உற்பத்தி, 440 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே ஆண்டில் தமிழகத்தின் மொத்த உள்ளாட்டு உற்பத்தி 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகப் பங்களிப்பை வழங்கும் மாநிலம்.
இதில் இன்னொரு விஷயம் என்ன தெரியுமா... 1960-களில் இந்தியாவிலேயே ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்தது. அப்போது, ஒரு மேற்குவங்கவாசியின் சராசரி ஆண்டு வருமானம் 360 ரூபாய். தமிழகத்தில் சராசரி ஆண்டு வருமானம் 330 ரூபாய் மட்டுமே. காமராஜர் போன்ற ஆட்சியாளர்கள் கொண்டுவந்த பல்வேறு நலத் திட்டங்கள், தொழிற்சாலைகள் மக்கள் பயனுள்ள திட்டங்களால் தமிழகத்தின் பொருளாதாரம் பெருகியது. கடுமையான உழைப்பால் இன்று நாட்டிலேயே இரண்டாவது பணக்கார மாநிலமாக தமிழகம் முன்னேறியுள்ளது. இப்போது, ஒரு மேற்குவங்கவாசியின் சராசரி ஆண்டு வருமானம் 80 ஆயிரம் ரூபாய். தமிழகத்தில் சராசரி ஆண்டு வருமானம் 1,36,000 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் `டெட்ராயிடு' என்று அழைக்கப்படும் சென்னை நகரம்தான் மோட்டார் தொழிலுக்கு இந்தியாவின் தலைமையகம். சாஃப்ட்வேர் துறையிலும் சென்னை கொடிக்கட்டிப் பறக்கிறது. காக்னிஸன்ட் முதல் இன்வென்ஷிஸ் வரை இங்கே கால் பதித்துள்ளன.
தென்மாநிலங்களில் கர்நாடகாவும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயம், தொழில் துறை, சாஃப்ட்வேர் துறையில் இந்த மாநிலம் கோலோச்சுகிறது. நாட்டின் மொத்த ஜி.டி.பி-யில் 217 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த மாநிலத்தின் பங்களிப்பாக உள்ளது. கேரளாவின் ஜி.டி.பி (120 பில்லியன் யு.எஸ் டாலர்கள்) உற்பத்தி குறைவாக இருந்தாலும் அந்த மாநிலம் வளத்தில் கொழிக்கிறது. இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான பிகாரைவிட கேரளா நான்கு மடங்கு பணக்கார மாநிலம். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் முறையே 136, 115 பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்களிப்பாக வழங்குகின்றன. இந்தியாவின் அதிக ஜி.டி.பி பங்களிப்பு தரும் முதல் 10 மாநிலங்களுக்குள் அத்தனை தென்மாநிலங்களும் இடம்பிடித்துள்ளன. 2017-ம் ஆண்டு மட்டும் நாட்டின் மொத்த ஜி.டி.பி-யில் தென்மாநிலங்களின் பங்களிப்பு 880 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கூட்டாட்சித் தத்துவம்கொண்ட இந்தியாவில், வசதி குறைந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அள்ளிக் கொடுக்கட்டும் தவறில்லை. அதற்காக, நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள மாநிலங்களை நசுங்கச்செய்வது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. கூட்டுக் குடும்பத்தில் சுமையைத் தாங்கலாமே தவிர, சுமைதாங்கியாகவே இருக்க முடியாது. இனிமேல், எந்த மாநிலங்கள் அதிக ஜி.டி.பி பங்களிப்பைத் தருகிறதோ... அதற்கேற்ற வகையில் மத்திய அரசின் நிதியுதவி அமைய வேண்டும் என்பதே சரியான முடிவாக அமையும்.
Source
Vikadan.
No comments:
Post a Comment