மத்திய, மாநில அரசுகளை, 'டுவிட்டரில்' விமர்சித்த கமல், திடீரென அரசியல் கட்சி துவங்கப் போவதாக, 2017 இறுதியில் அறிவித்தார். டுவிட்டரில், அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், சாதாரண மக்கள் எளிதில் படித்து, புரிந்து கொள்ள முடியாததாக இருந்தன. பின், சிலவற்றுக்கு, அவர் விளக்கமும் அளிக்க நேர்ந்தது. பொதுவாகவே, அவரை நாத்திக வாதியாக, மற்றவர்கள் கருதும் வகையில், கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார். அந்த சூழலில், கேரள முதல்வர், பினராயி விஜயனை சந்தித்தார். அங்கு, அரசியல் பாடம் கற்கப் போனதாக கூறினார்.அதனால், இடதுசாரி பாணியில், அவர் செயல்பாடுகள் அமையும் என, எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையில், பா.ஜ.,வை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதால், 'ஹிந்து விரோதி' என, பா.ஜ.,வினர் விமர்சித்தனர். ஆனால், 'தேவைப்பட்டால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பேன்' எனக்கூறி, அனைவரையும், கமல் திகைப்பில் ஆழ்த்தினார். மேலும், ஆண்டாள் நாச்சியார் பிரச்னையில், சினிமா துறையைச் சேர்ந்த, கவிஞர் வைரமுத்து சிக்கிய போது, தனக்கு சரியென மனதில் பட்டதை, கமல் வெளிப்படுத்தவில்லை. பின், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக, பிரச்னை ஏற்பட்ட போது, 'கண்ட இடங்களில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கக் கூடாது' எனக் கூறி, அதிர்ச்சி உண்டாக்கினார்.இந்நிலையில், 'நான் ஹிந்து விரோதி அல்ல. வேண்டுமென்றே என்னை சிலருக்கு எதிரானவன் போல் சித்தரிக்கின்றனர்' என, சில தினங்களுக்கு முன் கூறியுள்ளார். ரஜினி, ஆன்மிக அரசியல் குறித்து பேசிய பின், கமல் கருத்துக்களில் மாறுபாடு இருப்பதை உணர முடிகிறது. கமல், எந்த நிலைப்பாட்டிலும், நிலையாக நீடிப்பதாக தெரியவில்லை.அவரது கொள்கைகள் தெளிவின்றி உள்ளன. அவரின் அரசியல் நிலைப்பாடு புரியாமல், ரசிகர்கள் மட்டுமின்றி, மக்களும் குழம்பி உள்ளனர்.
No comments:
Post a Comment