மிகப் பெரிய புட்டிகளில் கிடைக்கும் தண்ணீர் அல்லது வீட்டிலேயே இயந்திரம்வைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் இப்போதைக்கு தண்ணீ
ருக்கான மூலதனமாகப் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. எது எப்படியோ நோய்களிலிருந்து தப்பிக்க தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல்வலி போன்றவை நீங்கி, நீண்ட ஆயுள் உண்டாகும் என்பதை "மீண்டுசுரம்வாதம். மந்தம். பொருமலும் போம். ஆயுளுண்டாகும்" என்ற பதார்த்த குண சிந்தாமணி பாடல் உணர்த்துகிறது.
எக்காரணத்தைக் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த தண்ணீரை அருந்த வேண்டாம். குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்துப் பருகலாம்.
குளிர்ச்சி தருவதோடு சேர்த்து, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு.
தண்ணீரைப் பயன்படுத்த சில ஆரோக்கிய வழிமுறைகள்;
* பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கி வீசிவிட்டு, பழங்காலத்தில் நீரைச் சேமிக்கப் பயன்படுத்திய செம்புக் குடங்களின் ஆதரவு தேடுவோம். நீரிலிருக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் திறன் செம்புக்கு உண்டு.
* நீரைக் கொதிக்கவைத்த பின்னர், நெல்லிக்கனிகளையும் சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம் அல்லது தண்ணீரைக் காய்ச்சும்போதே சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைக்கலாம். நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண்சத்துக்கள் தண்ணீரின் நோய் போக்கும் தன்மையைப் பன்மடங்கு அதிகரிக்கும். உணவைச் செரிப்பதற்கும் சீரகநீர் உதவும்.
* தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டுவைக்கலாம். தேற்றான் ஊறிய நீர், உடலுக்கு மிகுந்த பலமளிக்கும்.
* கருங்காலி வேர்ப்பட்டை, பதிமுகம் எனப்படும் சாயமரப்பட்டைகள் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு, கொதிக்கவைத்துப் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில், பல இடங்களில் குடிநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம் பதிமுகம்தான். பதிமுகத்துக்கு தோல் நோய்களைப் போக்கும் தன்மையும், கிருமிகளை அழிக்கும் குணமும் இருக்கின்றன.
* வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும்; நீருக்குச் சுவையும் கூடும்.
ஒருவாரத்துக்கு மேற்சொன்ன முறைகளை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அதற்குப் பிறகு தண்ணீரின் சுவைக்கும் வாசனைக்கும் அடிமையாகிவிடுவீர்கள்! மேற்சொன்ன மூலிகைகளில்உள்ள நுண்சத்துக்கள் சேர்ந்து உயிரூட்டம் கொடுக்கப்பட்ட நீர்தான் உண்மையான 'மினரல் வாட்டர்.' தண்ணீரைச் சுத்தப்படுத்த எந்த நிறுவனத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
No comments:
Post a Comment