"

Monday, December 11, 2017

இப்படி கீழ்த்தரமாகவா விஜயகாந்தை விமர்சிப்பது! அரசியல் நாகரிகத்தை அமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும்! கிருஷ்ணபிரியா கண்டனம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளதற்கு, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதாபிமானம், அரசியல் நாகரிகத்தை கற்றுக்கொள்ள செல்லூர் ராஜூ முயற்சி செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணபிரியா தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா. இவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இதில் கிருஷ்ணப்பிரியாவின் வீடும் ஒன்று. கிருஷ்ணபிரியா தனது பேஸ்புக் பக்கத்தில், அவ்வப்போது சமூக கருத்துக்களை கூறி வருகிறார். அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து பதிவொன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அண்மையில் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார். இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து ஒன்றை கூறியிருந்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து பதிலளிக்கும் வகையில் கிருஷ்ணப்பிரியா தனது பேஸ்புக் பக்கத்தில், ஒருவரது தனிப்பட்ட விஷயங்களில் விமர்சிப்பது நாகரிகமில்லாத செயல் என்று கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது மருத்துவ சிகிச்சைக்காக என்பது அனைவரும் அறிந்ததே. இதனைக் கிண்டல் செய்யும், தெர்மகோல் புகழ் அமைச்சர், மனிதாபிமானம் மற்றும் அரசியல் நாகரிகம் இவற்றை இனியாவது கற்றுக்கொள்ள எத்தனித்தால் நல்லது என்று கூறியுள்ளார்.
மேலும், அரசியல் ரீதியான விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர, ஒருவரது தனிப்பட்ட விஷயங்களில் விமர்சிப்பது என்பது நாகரிகமில்லாத செயல் என்றும் கிருஷ்ணபிரியா அந்த பதிவில் கூறியுள்ளார்.
கிருஷ்ணப்பிரியாவின் பேஸ்புக் பதிவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். துரோகிகள் எப்பொழுதும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். வேதனையான விஷயம், இவர்களை அமைச்சர் ஆக்கியது என்று மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox