"

Saturday, December 2, 2017

கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 9ம் நாளான நேற்று, கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக, இன்று மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் 9ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. காலை 11.45 மணியளவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை முடிந்து, ராஜகோபுரம் எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளி காட்சி அளித்தனர். மூவகை வடிவமான உருவம், அருவுருவம், அருவம், மூவகை தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் மற்றும் மூவகை வடிவத்திலாகிய ஆன்மா நீங்குதல், சிவத்தை அடைதல், போக முக்தியாகிய ஒன்பது நிலைகளும் நீங்கப்பெற வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துவதே ஒன்பதாம் நாள் விழாவின் நோக்கமாகும். மேளதாளங்கள் முழங்க தொடங்கிய நேற்று காலை உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மழையிலும் மாட வீதி முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 10 மணியளவில் உற்சவம் விமரிசையாக நடந்தது. அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, 'அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா' என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் முழங்கினர். பின்னர், மூஷிக வாகனத்தில் விநாயகரும். மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர்.

No comments:

Post a Comment

Adbox