"

Saturday, February 9, 2019

ரத்தக்கொதிப்பை குறைக்கும் வழிகள் - தெரிந்துகொள்வோம்



ரத்த அழுத்தம் என்பது உடலில் ஓடும் ரத்தம், ரத்தக்குழாய்களின் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகும். பொதுவாக 120/80 mm Hg என்பது ஒரு மனிதனுக்கு சரியான அளவுகோலாக கொள்ளப்படுகின்றது. இந்த ரத்த அழுத்தம் சூழ்நிலை, உழைப்பு, நோய் இவற்றிற்கேற்ப மாறுபடும்.

இந்த ரத்த அழுத்தமானது நரம்பு மண்டலத்தினாலும், நாளமில்லா சுரப்பிகளினாலும் சீராக இயக்கப்படுகின்றது. 120/80 mm Hg கீழுள்ள ரத்த அழுத்தத்தினை குறைவான ரத்த அழுத்தம் என்றும், அதற்குமேல் உள்ள ரத்த அழுத்தத்தினை உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக்கொதிப்பு என்று கூறுகின்றோம். இவை இரண்டிற்குமே பல காரணங்கள் உண்டு. சிலருக்கு திடீரென ஏற்படலாம்.
சிலருக்கு பல காலமாக தொடர்ந்து இருக்கலாம். தொடர் உயர் ரத்த அழுத்தம் இருதய பாதிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்கு காரணமாகின்றது. இன்றைய நாகரிக வாழ்க்கையும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகின்றது.
இன்னமும் 40 வயதிற்கு மேல் உள்ளோர் மாதம் ஒருமுறையாவது ரத்த அழுத்தத்தினை சோதனை செய்துக் கொள்வதில்லை என்பதால் அநேகருக்கு ரத்த அழுத்த பாதிப்பு ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகின்றது.
முறையான ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg (அ) இதற்கு சற்று குறைவாக இருக்கலாம்
உயர் ரத்த அழுத்த அறிகுறி 120-139 / 80-89 mm Hg
உயர் ரத்த அழுத்த முதல்நிலை 140-159/ 90-99 mm Hg
உயர் ரத்த அழுத்த 2-ம் நிலை 160/100 mm Hg,
முறையான ரத்த அழுத்தம் இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் 90/60 அல்லது அதற்கும் சற்று கீழே உள்ள ரத்த அழுத்தத்தினை குறைவான ரத்த அழுத்தம் என்றும், 90/60 - 130/80 வரை அளவான ரத்த அழுத்தம் என்றும் 140/90 (அ) இதற்கு மேல் உள்ளதினை உயர் ரத்த அழுத்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரது ரத்த அழுத்தம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். பகலில் கூடியும், இரவில் குறைந்தும் காணப்படும். இரவில் அதிகம் குறையும். ரத்த அழுத்தம் இருதய நோயோடு சம்பந்தப்பட்டது. வயது, ஆண், பெண் இவைகளும் ரத்த அழுத்த மாறுபாடுகளுக்கு காரணம் வகிக்கின்றது. குழந்தைகளுக்கு பெரியோரை விட சற்று குறைவாக இருக்கும்.
வயது கூடும்பொழுதும், முதியோருக்கும் ரத்த அழுத்தம் மாறுபடும். ரத்த நாளங்களின் முதிர்வே இதற்குக் காரணமாகின்றது. ஒருவரின் உடற்பயிற்சி, தூக்கம், ஜீரணசக்தி, மனநிலை இவையும் ரத்த அழுத்த மாறுபாடுகளுக்கு காரணம் ஆகின்றது.
உயர் ரத்த அழுத்தம்:
உயர் ரத்த அழுத்தம் உடலிலுள்ள சில பாதிப்புகளை குறித்தும் இருக்கலாம். சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் அவசர சிகிச்சையில் கொண்டும் விடலாம். தொடர் உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தினை அளிப்பதால் இருதயத்திற்கு அதிக வேலை ஆகின்றது. இருதய ரத்தக் குழாய்களில் தேவையற்ற உள் திசு வளர்ச்சி ஏற்பட்டு ரத்த ஓட்டம் சுருங்குகின்றது.
இதனால் இருதய தசைகள் தடித்து பலவீனம் அடைகின்றன. இதுவே இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என ஏற்படுத்துகின்றன. முறையான சிகிச்சை, உயர் ரத்த அழுத்தத்திற்கு அளிக்காவிடில் ஆபத்திலேயே கொண்டு விடுகின்றது.
* சிலருக்கு கர்ப்ப காலத்தில் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், மயக்கம், அதிர்ச்சி நிலை போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடும். அதிக ரத்தப்போக்கு, நச்சு (மருந்தினால் கூட இருக்கலாம்) ஹார்மோன் சரியின்மை, மிகக் குறைவான உணவு இவற்றினாலும் மேலும் சில மருத்துவ காரணங்களினாலும் ஏற்படுகின்றது.
ரத்த அழுத்தத்தினை பரிசோதிக்கும் பொழுது அதற்கு முன் சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு காபி அருந்தியோ, புகை பிடித்தோ இருக்கக்கூடாது. சிறுநீர் செல்லவேண்டிய அவசரம் இருக்கக்கூடாது. பரிசோதனைக்கு 5 நிமிடம் முன்பு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து இரு கால்களும் தரையில் பட இருக்கவேண்டும்.
ரத்த அழுத்தம் அவ்வப்போது மாறுபடும் என்பதால் நம் ரத்த அழுத்த அளவினை உறுதி செய்ய காலை தூங்கி எழுந்தவுடன் (அதாவது எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன்) எடுக்க வேண்டும்.
* வேலைகள் முடிந்த பிறகும் எடுக்கலாம். சிலருக்கு ரத்த அழுத்த பரிசோதனையே சற்று டென்ஷன் கொடுப்பதால் லேசான உயர் அழுத்தத்தினைக் காட்டலாம்.
உயர் ரத்த அழுத்தத்தினைக் கூட்டும் மற்ற காரணங்கள்:
* அதிக மது
* காபி
* புகையிலை
* தவறான பழக்கங்கள் ( உ-ம்- கஞ்சா)
* அதிக உடல் எடை
* அதிக உப்பு உணவு
* முதுமை
* மரபணு
* குடும்பத்தில் ரத்த உறவுகளுக்கு இதே பாதிப்பு இருத்தல்
* சிறுநீரக பாதிப்பு
* ஹார்மோன் சுரப்பிகள் அட்ரினல், தைராய்டு பாதிப்பு
* உணவு பழக்க வழக்கம் (அதிக கொழுப்பு உணவு)
* கர்ப்ப காலம் - சிலருக்கு
உயர் அழுத்த ரத்தத்தினை குறைக்கும் வழிகள்:
* அதிக பழம், காய்கறி, கொழுப்பு நீக்கிய பால் உணவுகள் நன்கு உதவும்.
* கொழுப்பு நிறைந்த உணவுகளை அடியோடு தவிர்த்து விட வேண்டும்.
* முழு தானிய உணவு, மீன், கொட்டை வகைகள். இயற்கை வழியில் ரத்த அழுத்தத்தினை குறைக்க உதவும்.
* அதிக மாமிச உணவு, இனிப்பு உணவு இவற்றினை தவிர்க்கவும்.
* உடற்பயிற்சி வயதிற்கேற்ப அவசியம்.
* மூச்சுப்பயிற்சி, ‘ப்ராணாயமா’ வெகுவாக உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க உதவுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இதனை மருத்துவர் அனுமதி பெற்றே ஆரம்பிக்க வேண்டும்.
* சில வகை துணை உணவுகள் (உ-ம்) னி10, ஒமேகா-3 போன்ற மாத்திரைகள் உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும். எனினும் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். பரிசோதனை செய்து சிலமுறை ரத்த அழுத்தத்தினை பதிவு செய்த பிறகு மருத்துவர் தேவையான மருந்தினை பரிந்துரைப்பார்.
மனம் போனபடி மருந்தினை கூடுதலாகவோ, குறைவாகவோ, நிறுத்தவோ கூடாது. தாழ்ந்த அல்லது குறைந்த அழுத்தம் என குறிப்பிடும்பொழுது 120/80 mm Hg கீழே இருப்பதனை குறிப்பிடுகின்றோம். சில புள்ளிகள் குறைந்த ரத்தம் சிலருக்கு இயற்கையில் சரியான அளவாகவே இருக்கலாம்.
மன உளைச்சல், உடல்வாகு, மூச்சுவாகு, மருந்து, உணவு இவை குறைந்த ரத்த அழுத்தத்திற்கு காரணமாகலாம். சில மருத்துவ காரணங்கள் இதற்கு உள்ளன. அவை:
* சிலருக்கு கர்ப்ப காலத்தில் தாழ்ந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
* இருதய வால்வு பிரச்சனை, இருதய துடிப்பு கம்மியாகுதல், இருதய பாதிப்பு, இருதய துடிப்பு குறைவு போன்றவைகளால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
* ஹார்மோன் பிரச்சினை
* உடலில் நீர் குறைதல்
* ரத்த இழப்பு
* அதிக அலர்ஜி பாதிப்பு
* வைட்டமின் பி12 சத்து குறைவு
* சில குறிப்பிட்ட மருந்துகள் ஆகியவை ஆகும். சிலருக்கு உட்கார்ந்து எழும் பொழுது தாழ் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
* சிலருக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு சாப்பிட்ட பிறகு தாழ் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
* சில நரம்பு பிரச்சினைகள்
* வயது கூடும்பொழுது
* சில நோய்கள் ஆகியவையும் ஆகும்

No comments:

Post a Comment

Adbox