"

Monday, July 2, 2018

பசுமை வழிச்சாலைக்கு புதிய நிபந்தனைகள் - பொதுமக்களிடம் கருத்து கேட்க - மத்திய அரசு உத்தரவு


சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.  தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தொடங்கும் இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக சேலம் புறநகர் பகுதி வழியாக சென்று இணைகிறது. இந்த சாலைக்காக 5 மாவட்டங்களிலும் விவசாய நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்படுகின்றன.

இந்த சாலையில் வனப்பகுதி பாதிக்கப்படும், ஏராளமான மரங்களும் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இயற்கை விவசாயமும் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.ஆங்காங்கே விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே சேலம்- சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வனம்- சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய நிபந்தனைகள் விதித்துள்ளது.இது சம்பந்தமாக திட்டத்தின் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு இயக்குனர் ரகு குமார் கோடாலி சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை-சேலம் 277 கி.மீ. தூர பசுமை வழி சாலைக்கு வனம்-சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வனம்- சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த வகையில் பிரச்சினைகள் எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.

ஏற்கனவே சென்னை- பெங்களூர் இடையே 265 கி.மீ. தூர எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் கர்நாடகத்தில் பொது மக்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் நிறைவேற்ற முடியாமல் நிற்கிறது.இதற்கு பதிலாகத்தான் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை நிறைவேற்றப்பட்ட பின்பு 2-வது கட்டமாக கோவை வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு கேரள மாநிலம் கொச்சி வரை நீடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் இந்த திட்டத்துக்கு தொடக்க கட்டத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பொதுமக்கள் கருத்து கேட்ட பின்பே நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.

Source
தினசெய்தி.

No comments:

Post a Comment

Adbox