"

Saturday, April 7, 2018

நண்பரின் இறப்பைத் தாங்க முடியாமல் பிணவறையில் கதறி அழுத பெண் அமைச்சர்!


வாணியம்பாடி அருகே மின் கம்பி அறுந்துவிழுந்து உயிரிழந்த குடும்ப நண்பரான டிரைவரின் உடலைப் பார்த்து அமைச்சர் நிலோபர் கபில் கதறி அழுதக்காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக அமைந்தது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ளது கோவிந்தபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசு. இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்கள் டூவிலரில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அதே வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், லாரி சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின்கம்பம் சரிந்து கம்பி அறுந்து பொன்னரசு மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி மனைவி கண் முன்னால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாந்திக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு பொன்னரசு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வாணியம்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னரசுவின் உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
பொன்னரசு, அமைச்சர் நிலோபர் கபிலின் குடும்ப நண்பராவார். அவர் இறந்த தகவல் கிடைத்ததும் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கே நிலோபர் கபில் சென்றார். அங்கு பொன்னரசுவின் உடலைப் பார்த்து அமைச்சர் கதறி அழுதார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்களும், கண் கலங்கினர். இதுகுறித்து அமைச்சர் தரப்பினர் கூறுகையில், `பொன்னரசுவின் அப்பா, அமைச்சர் நிலோபர் கபிலின் அப்பா நடத்தி வந்த மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றினார். பொன்னரசும் அமைச்சர் நிலோபர் கபிலிடம் டிரைவராக இருந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருக்கும் நட்புடன் இருந்து வந்தனர்'' என்றனர்.

No comments:

Post a Comment

Adbox