"

Monday, December 11, 2017

SBI வங்கியில் அதிரடி . வங்கி பெயர், IFSC (Code) குறியீடுகள் திடீர் மாற்றம்

சென்னை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கி தனது 1,300 வங்கிக் கிளைகளின் பெயர் மற்றும் ‘ஐஎப்எஸ்சி’ (I.F.S.C.)எனப்படும் அடையாள குறியீடை மாற்றியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன், அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து வங்கிகள் இந்த ஆண்டு ஏப்ரலில் இணைக்கப்பட்டன.
இதையடுத்து ஒரு பகுதியில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள், வேறு கிளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில கிளைகள் புதிய இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், சென்னை, ஹைதரபாத், மும்பை உட்பட பல நகரங்களில் செயல்பட்டு வந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 1,300 கிளைகளின் பெயர்கள் மற்றும் அதற்கான ‘ஐஎப்எஸ்சி’ எனப்படும் வங்கி கிளைக்கான அடையாள குறியீடும் மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் பிரவீண் குப்தா கூறியதாவது:
‘‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், துணை வங்கிகள் இணைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக பல்வேறு வங்கிகளை இணைத்துள்ளோம். இதனால் 1,300 வங்கிக் கிளைகளின் பெயர்கள் மற்றும் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் அடையாள ‘ஐஎப்எஸ்சி’ எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம்.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கிளைகள் குறித்த தகவல்கள், ஐஎப்எஸ்சி கோடுடன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் பழைய ‘ஐஎப்எஸ்சி’யுடன் பண பரிவர்த்தனை வந்தாலும் அதை பரிசீலித்து உரிய வங்கிக் கணக்கில் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்கள் வங்கியின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 23,000 வங்கி கிளைகளின் பெயர்கள் மற்றும் அதற்குரிய ‘ஐஎப்எஸ்சி’ உடன் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பயப்படத் தேவையில்லை’’ எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Adbox