நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்று இன்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த்.
தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடுவோம் என்றார் அவர். காலம் குறைவாக இருப்பதால் அதற்கு முன்பு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற அவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்றார்.
"எனக்கு பணம் புகழ் வேண்டாம். நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை நீங்கள் (ரசிகர்கள்) எனக்கு அளித்துவிட்டீர்கள் என்று கூறிய அவர், என்னைத் தேடி 1996- ஆம் ஆண்டே பதவி வந்தது.
45 வயதில் பதவிக்காக ஆசைப்படாத நான் 65 வயதிலா ஆசைப்படப் போகிறேன்," என்றார்.
சீர்கெட்ட ஜனநாயகம்.
மேலும் அவர், "ஜனநாயம் சீர்கெட்டுவிட்டது. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் தமிழர்கள் எல்லோரையும் தலைகுனிய வைத்துவிட்டது. மற்ற மாநிலத்தினர் நம்மை இழிவாக பார்க்கிறார்கள். இப்போது வராவிட்டால் எனக்கு மன்னிப்பே இல்லை.
அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. நடுகடலில் இறங்கி முத்தெடுப்பது போல. ஆண்டவனின் அருளும், மக்களின் செல்வாக்கும் கண்டிப்பாக எனக்கு உள்ளது."
பழைய காலத்தில் ராஜாக்கள் வேறு நாடுகளுக்கு சென்று கொள்ளையடிப்பார்கள் ஆனால், இப்போது அரசியல்வாதிகள் சொந்த நாட்டிலேயே கொள்ளை அடிக்கின்றனர் என்றார்.
"தொண்டர்கள்தான் ஒரு கட்சியின் ஆணி வேர் என்கிறார்கள். ஆனால், அவர்கள் தான் வேர், கிளை, மரம் எல்லாமே. அவர்களில் இருந்துதான் எம்.எல்.ஏ, எம்.பி, முதமைச்சர் உருவாகின்றனர். எனக்குத் தொண்டர்கள் வேண்டாம். மக்களுக்கு உரிமைகள் சென்று சேர்வதை தடுப்பவர்களிடம் இருந்து அவர்களை காக்கும் காவலர்கள்தான் வேண்டும்," என்று அவர் கூறினார்.
பொதுநலனுக்கு இல்லாமல் சுயநலத்திற்கு போய் நிற்காத காவலர்கள் வேண்டும். தவறை தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும். இந்த காவலர்களின் பிரதிநிதி நான் என்றார்.
'முதலில் படையைத் தயார் செய்வோம்'
தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பதிவு செய்யப்பட்ட பல ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், பதிவு செய்யப்படாத மன்றங்களின் எண்ணிக்கை அதைவிட ஒன்றரை முதல் இரண்டு மடங்கு இருக்கும். அவற்றை முதலில் பதிவு செய்து, பெண்கள், இளைஞர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் நமது படையை முதலில் தயார் செய்வோம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
ரஜினியின் அறிவிப்புக்காக கூடியிருந்த ரசிகர்கள்
அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை, தனது ரசிகர்கள் அரசியல் விமர்சனங்கள் செய்வது, அறிக்கை விடுவது, போராட்டம் நடத்துவது ஆகியவற்றில் இருந்து விலகி இருக்குமாறு அவர்களிடம் ரஜினி அறிவுறுத்தினார். "அவற்றைச் செய்ய பிறர் இருக்கிறார்கள். " என்றார் அவர்.
"மக்களை ஒருங்கிணைக்கும் வரை அரசியல் பேச வேண்டாம். அரசியல் கட்சிகளைத் திட்ட வேண்டாம்," என்று அப்போது அவர் கூறினார்.
'முடியாவிட்டால் 3 ஆண்டுகளில் பதவி விலகல்'
"மக்கள் மத்தியில் நமது செயல் திட்டத்தை முதலில் விளக்க வேண்டும். இதை செய்வோம், இதை செய்ய முடியாது என்று அவர்களிடம் கூற வேண்டும். பதவிக்கு வந்தபின்னர் அவற்றைச் செய்ய முடியாவிட்டால் மூன்று ஆண்டுகளில் நாம் பதவி விலக வேண்டும்," என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறினார்.
No comments:
Post a Comment